
திருநெல்வேலியில் வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி ஜங்சன் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும், செல்வகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
தங்கராஜ் நெய் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் முதலீடு செய்யுங்கள் என செல்வகுமாரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி பல தவணைகளில் ரூ.3 கோடி வரை செல்வகுமார் தங்கராஜிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தங்கராஜூடன் கூட்டு சேர்ந்து மணிகண்டன், சாமிநாதன், பழனியம்மாள், அபிராமி ஆகியோர் போலியாக ஜி.எஸ்.டி. தயார் செய்து நெய் வியாபாரம் செய்ததாக தெரிகிறது.
இதில் செல்வகுமாருக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ரூ.3 கோடி வரையில் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து செல்வகுமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கராஜ் உள்பட 5 பேரும் சேர்ந்து செல்வகுமாரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன், சாமிநாதன், பழனியம்மாள், அபிராமி ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



