சேலம் : அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சிக்னல் முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான 6.8 கிலோ மீட்டர் நீள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சேலத்தில் பஸ் போர்ட் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மக்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக இந்த ஈரடுக்கு பாலம் அமையும். வழக்கு முடிந்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்த பின்னர் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும். உலகத் தரத்திலான சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; தனி நபரின் வசதிக்காக அல்ல. யாருடைய நிலத்தையும் பறித்து 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்! என்றார்.
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட பகுதி திறப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், சேலம் மாநகரில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை பட்டியலிட்டார். சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பில் அதிநவீன பேருந்து நிலையமான பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். சாலை, உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




