கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

dindivanam-car-accidentவிழுப்புரம்: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். திருச்சி – லால்குடியை அடுத்துள்ள அன்பில் பகுதியைச் சேர்ந்த மோகன் (61) தனது குடும்பத்தினருடன் சென்னை நோக்கிச் சென்றார். காரை லால்குடியைச் சேர்ந்த சசிகுமார் (38) என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில் கார் சென்றபோது, திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பனை மரத்தில் மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த மோகன், அவரது தங்கை வசந்தா (47), வசந்தாவின் மகள் ஹரிணி (22), மோகனின் மகள் ரம்யா (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரம்யாவின் மகள்கள் லூசியா(8), சமயா(5), ராஜேஷ் என்பவரின் மகள் மகாதி(6) மோகனின் மனைவி குமாரி (54) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த சசிகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஒலக்கூர் போலீஸார் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.