
கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் ஊராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(70). விவசாயி. இவர் தனது வீட்டில் 17 ஆடுகள் வளர்த்து பிழைத்து வருகிறார்.
தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு விட்டு அந்த பகுதியில் உள்ள சுனையில் ஆடுகளை நீர் அருந்த செய்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பரமசிவம் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார்.
மதியம் 2 மணியளவில் ஆடுகள் அந்த பகுதியில் உள்ள சுனையில் தண்ணீரை குடித்துள்ளன. தண்ணீரை குடித்த சிறிது நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக வாயில் ரத்தம் வந்து இறந்துள்ளன. 14 ஆடுகளும் அடுத்தடுத்து இறந்ததை கண்டு பரமசிவம் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அப்பபகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆடுகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பரிதாபமாக 14 ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக இறந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் அப்பகுதிக்கு சென்றார்.
ஆடுகள் பலியானது குறித்து காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விஷம் கலந்த தண்ணீரை ஆடுகள் குடித்ததால் அவை இறந்ததாக கூறப்படுகிறது.
தண்ணீரை குடிக்காததால் 3 ஆடுகள் உயிர் தப்பியது. இறந்த ஆடுகளை கண்டு விவசாயி பரமசிவம் கண்ணீர் விட்டு அழுதார்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ஆடுகள் தண்ணீர் குடிக்க கூடிய சுனையில் யாரோ விஷத்தை கலந்து உள்ளனர்.
இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயி பரமசிவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுனையில் விஷம் கலந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



