இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் “தர்ம பிரபு” படத்தை தடை செய்யக் கோரி நெல்லை மாநகர் இந்து முன்னணி சார்பில் நெல்லை பூர்ணகலா திரையரங்கு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
புராண வரலாறுடன் இணைந்த நகைச்சுவைக் கதை என்ற பெயரில், தர்மபிரபு என்ற படம் வெளியிடப் பட்டுள்ளது. சிரிப்பு நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான இந்தப் படம், ஹிந்து மத தெய்வங்களை இழிவு படுத்தும் வகையில் மோசமாக சித்திரிக்கப் பட்டிருப்பதாகவும், மற்ற வேற்று மத தெய்வங்களைப் போற்றும் வகையில் இருப்பதாகவும், இதனால் மதங்களுக்கு இடையே வன்மத்தைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் புகார் கூறப் பட்டுள்ளது.
மேலும் துக்ளக் ஆசிரியராக இருந்த சோ ராமஸ்வாமியை கிண்டலும் கேலியும் செய்யும் விதத்தில் மோசமான சொல்லாடல்களால் சமூகத்தில் இருக்கும் அவரது நன்மதிப்பைக் கெடுக்கும் வகையிலும் இருப்பதாகவும் சோ ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர். 
இந்நிலையில், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு கோரி வருகிறது. இதை ஒட்டி செவ்வாய்க்கிழமை இன்று மாலை 5.30 மணி அளவில் நெல்லை பூர்ணகலா திரையரங்கம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் நெல்லை கோட்ட செயலர் தங்க மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



