கணவனுடன் தகராறு: ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் தற்கொலை

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்த மாயராஜ் மனைவி சண்முக பிரியா(26). இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூர் – விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாயராஜ் பணி முடிந்து வீட்டுக்கே வருவதில்லையாம். மேலும் வீட்டுச் செலவுக்கும் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சண்முக பிரியா கணவர் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கே மாயராஜைப் பார்த்து வீட்டுக்கு ஏன் வரவில்லை? எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சாத்தூர்- விளாத்திகுளம் பஸ்சில் மாயராஜ் ஏறியுள்ளார். அப்போது சண்முகப் பிரியாவும் அதே பஸ்சில் ஏறி, நீ வீட்டுக்கும் வருவதில்லை. குடும்பச் செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை, என்ன பிரச்னை என மாயராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு மாயராஜன் நீ வீட்டுக்குச் செல், நான் பிறகு வந்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த சண்முக பிரியா ஓடும் பஸ்சில் இருந்து திடீரென குதித்ததில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.