1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முழு பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி 10ம் வகுப்புக்கு 39%,11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்தன.
இதைத் தொடர்ந்து 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து, ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று 1 – 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. பிளஸ் 2 வகுப்புக்கு 20ம் தேதியும் பிளஸ் 1 வகுப்புக்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்த நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவால் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.





