
அதிதீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறியதால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பியது மாமல்லபுரம் புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் அரசின் முன்னேற்பாடுகளால் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம் தப்பியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை.
மாண்டஸ் புயல் தீவிர புயலாக இருந்து பின்னர் வலுவிழுந்தது. இதனால் நேற்று நள்ளிரவு கரையை கடந்தபோது புயலாகவே அது கரையை கடந்தது. தீவிர புயலாக கரையை கடந்ததால் 100 கி.மீ.க்கும் அதிகமாக காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி காற்று வீசினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தீவிர புயல், புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. அதே நேரத்தில் தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது. புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம் தப்பியுள்ளது.
முன் கூட்டியே உயரமான இடத்தில் உள்ள பெயர் பலகைகளை கண்டறிந்து அவைகளை அப்புறப்படுத்தியதுடன், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
அதே நேரத்தில் சென்னையிலும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை. இப்படி முன் கூட்டியே அரசு நிர்வாகம் முழு வீச்சில் களம் இறங்கியதாலும், நள்ளிரவில் புயல் கரையை கடந்ததாலும் சென்னை மாநகரும் பாதிப்பில் இருந்து தப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.