
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து ஹிந்தியில் பாடத்துவங்கி இந்தியாவில் தலை சிறந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் சந்தேகமரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அவரது ரசிகர்கள் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகமுதல்வர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. 1945-ம் ஆண்டில் வேலூரில் பிறந்த வாணி ஜெயராம்-ன் இயற்பெயர் கலைவாணி. வங்கி ஊழியராக பணியாற்றிய வாணி ஜெயராம், வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்றபோது, அவரின் திறமையை அடையாளம் கண்ட இந்தி திரையுலகம் அவரை ஹிந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வாணி ஜெயராம் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். இதன் பின்னர் இந்த வழக்கு சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் கூறாய்வுக்குப் பிறகுதான் வாணி ஜெயராம் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வாணி ஜெயராம் தனியாக தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டுப் பணியாளர் மலர்க்கொடி இன்று காலை 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியும் திறக்காததால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரிக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் எடுத்து வந்த வீட்டு சாவி மூலம் கதவு திறக்கப்பட்டு, வீட்டுக்குள் சென்றனர்.
வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வாணி ஜெயராம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர்.
தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.