
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், 18 பேரை நீதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.
இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், 6 வக்கீல்கள், 3 மாவட்ட நீதிபதிகள் என 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடந்த மாதம் பரிந்துரை செய்தது.
இந்த 9 பேரில் தற்போது முதல்கட்டமாக உயர்நீதிமன்ற வக்கீல்கள் எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
இதனையடுத்து இன்று காலை 10,35 மணிக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் 5 பேருக்கும் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். விக்டோரியா கவுரி. பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.