–மீ.விசுவநாதன்–
“சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்” என்ற தலைப்பில் நேற்று மாலை (27.08.2023) ஐந்தரை மணிக்கு சென்னை அடையார் இந்திராநகரில் உள்ள யூத் ஹாஸ்டல் அரங்கில் எளிமையான, அருமையான நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது.
நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட, என்றும் நம் நினைவில் வைத்து வணங்கத் தக்கத் தியாகிகளைப் பற்றித் தம் நினைவுகளை எழுத்தாளர் திரு. நரசையா (91 வயது), கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் மிக உருக்கமாகப் பேசியது மனத்தின் ஆழத்தில் நன்றாகப் பதிந்தது.
இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த வரலாற்றை எடுத்துச் சொல்ல இவர்களைப் போன்ற தேசிய எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இன்னும் வர வேண்டும் என்ற ஆதங்கத்தை இவர்களது உரை உணர்த்தியது.
திருமதி கிருத்திகா அனந்த் அவர்கள் இறை வணக்கம் பாட, திரு சிட்டி வேணு கோபாலன் அவர்கள் வரவேற்புரை கூற நிகழ்ச்சி துவங்கியது.
மகாகவி பாரதியாரின் மைத்துனரின் மகனும் செல்லம்மா பாரதியின் சகோதரரின் மகனுமான திரு. எஸ்.சுந்தர், ஜெய்ஹிந்த் செண்பகராமனின் வழித் தோன்றல் திரு. சேது சேஷன், தியாகி வெங்கடாசலம் ஐயரின் மகன் திரு. நாகராஜன் போன்ற பெரியோர்களைத் தியாகிகளின் வழித்தோன்றல்கள் என்று மகிழ்ந்து கௌரவித்தனர்.
முதலில் பேசிய எழுத்தாளர் நரசையாவின் அற்புத உரையில் இருந்து சில தியாகத் துளிகள்
அரியலூருக்கு மகாத்மா வரப்போகிறார். பள்ளி மாணவர்கள் அவரை நேரில் சந்திக்க அவ்வூர் ரயில் நிலைத்தில் உள்ள பெரிய மைதானத்தில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். ரயிலும் வந்தது. ரயில் பெட்டியின் கதவினைத் திறந்து கொண்டு “காந்தி” சிரித்த முகத்துடன் நிற்பதைக் கண்டு பரவசமானது இன்றும் பசுமையாக நினைவிருப்பதாகச் சொன்னார் தொண்நூற்றி ஒன்று வயதான இளைஞர் நரசையா.
தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதித்தால்தான் தானும் கோவிலுக்குள் வருவேன் என்ற காந்தியடிகள், அவர்களை அனுமதித்த பின்புதான் மதுரை மீனாட்சி அம்மனையும், பழனி முருகனையும் தரிசித்ததாகக் கூறினார்.
தியாகி நீலகண்ட பிரும்மச்சாரியை நேரில் பார்த்திருப்பதாகவும், ஆஜானுபாகுவான அவர் , மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுடுவதற்கான பயிற்சியைத் தந்தவரென்றும் , பிறகு துறவு கொண்டு “ஓம்கார் நாத்” என்ற பெயரில் தவவாழ்க்கை மேற்கொண்டுவிட்டார் என்றார்.
எப்படி ஆங்கிலேயர்கள் இந்தியர்களை இழிவாகப் பார்த்தனர் என்பதற்குத் தன்வாழ்க்கை அனுபவம் ஒன்றைச் சொன்னார்.
மேற்படிப்புக்காகச் சென்றிருந்த வேளையில் குறைந்த அளவே வசதியான விடுதியில்தான் தங்க பணவசதி இருந்ததாம். அந்த விடுதியின் அதிகாரி ஒரு ஆங்கில வெறியர். பெயர் Joice. அவர் இவரிடம் ,”உனக்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வருமா?”, “இங்கு எப்படி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும்” தெரியுமா என்று ஏளனமாகக் கேட்டாராம். அதற்குப் பொறுமையாக இருந்துவிட்டு மறுநாள் அதே மேஜை மீது,”A thing of beauty is joy for ever” என்ற வாக்கியத்தில் Joy என்ற இடத்தில் “Joice” என்று ஒரு காகிதத்தில் எழுதி வைத்தாராம். அதன் பிறகு அந்த ஆங்கிலேயர் நரசையாவிடம் மிகவும் தன்மையாக நடந்து கொண்டாராம். இதுபோன்ற யுக்திகளைத் தன் தந்தையிடம் இருந்து கற்றேன். அதனால் பல கொடுமைகளையும், அவமானங்களையும் ஏற்றுத்தான் நமக்கு விடுதலை கிடைத் திருக்கிறது. எதுவுமே சும்மாக் கிடைக்காத போது சுதந்திரம் மட்டும் சும்மாக் கிடைக்குமா? என்ற கேள்வியோடு விடை பெற்றார் நரசையா அவர்கள்.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிமணியனினின் அற்புதமான உரையில் இருந்து சில தியாகக் குறிப்புகளைத் தருகிறேன்
1) ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணிக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த திரு. பரமசிவம் அவர்கள் நரசையாவின் இளைய சகோதரர் என்றும், அவரிடம் தான் பாடம் (1971ஆம் வருடம்) கற்றிருக்கிறேன் என்றவர் ஒரு அதிர்ச்சியான செய்தியையும் பகிர்ந்தார்.
பேராசிரியர் பரமசிவம் நல்லாசிரியர் மட்டுமல்ல. சிறந்த தேசபக்தர். சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட, எளியவர்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரைக்குச் சென்றார். தாழ்த்தப்பட்டவர்களைத் தேடிச் சென்று கல்வி புகட்டி வந்த காலத்தில் இவரால் கற்று மேலே வந்த சிலரது துரோகச் செயலால் 1992 ல் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற செய்தி அறிந்த நாள் முதல் இன்றுவரை அதிலிருந்து மீள முடியவில்லை என்றார்.
நாம் அனைவரும் எப்போதும் நினைத்துப் பெருமை கொள்ள வேண்டியவர் திரு. G. சுப்பிரமணிய ஐயர் அவர்கள்.
ஆங்கிலேயரின் அடிமைகளல்ல நாம். சுதந்திர மானவர்கள் என்ற எண்ணத்தை வலியுறுத்தவே முதன்முதலில் “The Hindu “என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிக்கையைக் வெளியிட்ட தேச பக்தர்.
அதுமட்டுமல்ல, எப்போதும் தனது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் பையில் இருக்கும் “விடுதலைக்கான இருபது கேள்விகள் அடங்கிய புத்தகத்தின் பிரதிகளை” தான் காண்போருக்
கெல்லாம் விநியோகம் செய்வார். அதைப் படிப்போர் தங்களையும் விடுதலைப் போரில் ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கம்தான்.
The Hindu பத்திரிக்கை மேல் தட்டு மக்களைத்தான் அடைகிறது என்றுணர்ந்து அடித்தட்டு மக்களுக்கும் தேச விடுதலைக் கான செய்தி சென்று சேர வேண்டு மென்றுதான் தமிழில் சுதேசமித்திரன் பத்திரிக்கையையும் தொடங்கிய முதல் பத்திரிக்கையாளர் G. சுப்பிரமணிய ஐயர்.
பள்ளி ஆசிரியப் பணியில் இருந்த மகாகவி பாரதியாரின் திறமையை இனங்கண்டு அவரை சென்னைக்கு அழைத்து வந்து தனது சுதேசமித்திரன் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக நியமித்தார்.
சுதந்திரப் போராளி சுப்பிரமணிய சிவாவைப் போற்றிப் பாதுகாத்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்.
ஆங்கிலேயர்கள் சுப்பிரமணிய சிவாவை தொழு நோயாளிகள் இருக்கும் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தனர். சிவாவுக்கும் கடுமையான தொழுநோய் தொற்றிக் கொண்டது. சிவாவை விடுதலை செய்தனர்.
தொழு நோயாளியான தியாகி சுப்பிரமணிய சிவாவை அழைத்து வந்து தன்னுடனேயே வைத்து சிகிச்சையளித்து வந்தார். அதன் பரிசாக சுப்பிரமணிய ஐயருக்கும் நோய் தொற்றிக் கொண்டது. மிகவும் அவதிப் பட்டார் ஐயர்.
சென்னைக்கு வந்த மகாத்மா காந்தி செய்தியை அறிந்து ஜி. சுப்பிரமணிய ஐயரைக் காணச் சென்றார். தொழு நோயால் கைகளில் சீழ் வடிந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி ஐயரின் கைகளில் வடியும் சீழினை பஞ்சினால் மெல்லத் துடைத்து சுத்தம் செய்தார். காந்தியின் இந்தச் செயல் கண்டு ஐயர் கண் கலங்கினார். ஒரு சிறந்த தேச பக்தருக்குச் செய்கின்ற தொண்டிது என்று மகாத்மா சொன்னாராம்.
அப்படிப் பட்ட தியாகி, பத்திரிக்கையாளர் ஜி. சுப்பிரமணிய ஐயரின் பிறந்த நாளைத்தான் பத்திரிக்கையாளர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்றார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர்.
தியாகி ஆர்யா அவர்கள்தான் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கில அரசின் கொடியை இறக்கி பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏற்றியவர். சிறைவாசம் பெற்றவர்.
ஆர்யாவுக்கு கைரேகை பலனும் பார்க்கத் தெரியும் என்ற தகவலையும் பதிவு செய்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு துறவியும் போராடி இருக்கிறார். அவர் ஆங்கிலேய அந்தாதி என்ற நூலும் எழுதியுள்ளார்.
“வீரபாண்டிய கட்ட பொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள்” இந்த மூன்று தியாகிகளையும் நான் வணங்குகிறேன் என்றும் சொன்ன அந்தத் துறவிதான் வண்ணச்சரபம் சுவாமிகள். திருச்செந்தூர் முருகன் அருளால் பல அற்புதமான இலக்கண சுத்தமான பாடல்களைப் பொழிந்திருக்கிறார்.
கல்கி, சதாசிவம்,ஏ.என்.சிவராமன்., பி.எஸ். ராமையா (மணிக்கொடி) போன்றவர்கள் ஒன்றாக அலிப்பூர் சிறையில் இருந்தவர்கள்.
சிறைக் கைதிகளுக்கு சிவராமனும், பி.எஸ். ராமையாவும்தான் தினசரி இந்திப் பத்திரிக்கைகளைப் படித்துக் காண்பிப்பார்களாம்.
ஒருமுறை சிறைக் கைதிகளுக்கு சதாசிவம் சுவையான மைசூர் பாகு செய்து கொடுத்ததை மிகச்சுவையாக ஏ.என்.சிவராமன் சதாசிவம் அவர்களைச் சந்தித்த போது நினைவு கூர்ந்தாராம்.
தனது தாத்தா திருமங்கலம் சுப்பையர் நடத்தி வந்த ஹோட்டலுக்கு வருகின்ற (சிறைக்குச் சென்று திரும்பிய )தியாகிகளுக்கு உணவு இலவசமாகத் தந்தாராம்.
கீழாம்பூரில் தனது வீட்டிலும், மேலாம்பூரில் உள்ள தனது தோட்டத்திலும் நிறையத் “தறிகள்” வைத்து கதராடைகள் நெசவு செய்ததாகவும், தன் இறுதிக் காலம்வரை தாத்தா கதராடைதான் அணிந்து வந்தா ரென்றும் கூறினார்.
தாத்தா திருமங்கலம் சுப்பையருக்கு வலது கையாகச் செயல் பட்டவர் “பச்சைப் பெருமாள்” என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த பெரியவர்.
சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய வருடம் அன்னக் கொடி (வெள்ளைக் கொடி) ஏற்றி கீழாம்பூர் கிராமத்தில் பச்சைப் பெருமாள் ஏற்பாட்டில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அன்னதானம் செய்த தாத்தாவின் தேசப்பற்றில் சிறுதுளி தன்மீதும் தெளித்த காரணத்தால்தான் தனக்கு தேசத்தின் மீதும், தேசியக் கொடி மீதும் பக்தி வரக்காரணம் என்றார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்.
இந்திர நீலன் சுரேஷ் குமாரின் இணைப்புரை, நன்றியுரை கனகச்சிதம். தேசியகீதம் முழங்க நிகழ்ச்சி நிறைந்தது. வந்தவர்களுக்கு பாதுஷா, மிக்சர், டீ தந்து உபசரித்தனர் விழாக் குழுவினர்.