விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் அமைந்திருக்கும் ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் அதிஷ்டான அருளாலயம், மணி மண்டபம், ராஜகோபுரம், மூர்த்திகள் சந்நிதி ஆகியவற்றுக்கு ஆகம மற்றும் வைதீக முறைப்படி நடைபெற்ற இந்த மஹாகும்பாபிஷேக வைபவத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தபோவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணிகள் கடந்த ஓராண்டாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன. ஒவ்வொரு சந்நிதிக்கும் பாலாலயம் ஆகி, சந்நிதிகள், மணிமண்டபம், அதிஷ்டான அருளாலயம், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வண்ணமிடல், ஓவியங்கள் புதுப் பொலிவு பெறும் வகையில் வண்ணம் தீட்டுதல், சுதைச் சிற்பங்களை சரிசெய்தல், மண்டபங்கள் இவற்றில் பராமரிப்புப் பணிகள் செய்தல் என தபோவன வளாகத்தில் திருப்பணிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதிகள், உணவுக் கூடம், வைதீகர்கள் தங்கும் இடங்கள், உணவுச்சாலைகள் என புதிதாக ஏற்படுத்தப் பட்டன.
இதை அடுத்து கும்பாபிஷேக விழாவுக்கான தொடக்கமாக பந்தல்கால் நடப்பட்டு, ஜூன் 12ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்று, கும்பாபிஷேகத்துக்கான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்க்ரஹணம், பிரவேசபலி ஆகியவை நடைபெற்றன. ஜூன் 13ம் தேதி மாலை தொடங்கி, அடுத்த மூன்று நாட்களிலும் இரு வேளைகளிலும் இரு காலமாக, ஆறு கால பூஜைகள் நடைபெற்றன.
ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிஷ்டானம், மணிமண்டபம், மூர்த்திகள், ராஜகோபுர யாகசாலைகளில் விசேஷ மூல மந்த்ர ஹோம த்ரவ்யாஹுதி, நவாவரண பூஜை ஆகியவை முடிந்து, மங்கள பூர்ணாஹுதி, யாத்ராதானம் ஆகியவை முடிந்து, காலை 6.15க்கு மேள தாளம் வேத கோஷம் முழங்க கடம் புறப்பாடு ஆனது. பின்னர் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகள் சந்நிதிகளில் ஆகம முறைப்படியும், ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளின் அதிஷ்டான அருளாலயம், மணிமண்டபம் ஆகியவற்றில் வைதீக முறைப்படியும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, புனித நன்னீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் ஆனது.
கும்பாபிஷேக விழாவில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள். ஹைதராபாத் வேத பவனத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச, ஸ்ரீராம கணபாடிகள் உள்ளிட்ட வேத பண்டிதர்கள், யாகசாலை பூஜைகளை சிறப்பாக நடத்தி வைத்தார்கள். கும்பாபிஷேகம் குறித்த சிறப்பான தகவல்களுடன் நேரலை வர்ணனையை சுதா சேஷய்யன் செய்திருந்தார்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கும், தபோவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராம மக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு, தொடர் அன்னதானங்கள் நடைபெற்றன. இவற்றில் ஒவ்வொரு வேளையும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்று ஸ்வாமி பிரசாதம் ஏற்றுக் கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், தினமும் விரிவான அன்னதானம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இலவச மருத்துவ முகாம், நீர் மோர்ப் பந்தல் ஆகியவையும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தபோவன அறக்கட்டளையின் செயலாளர் கே.அமர்நாத், தலைவர் விஜயராகவன், பொருளாளர் டாக்டர் ரமணி உள்ளிட்ட அறங்காவலர்கள் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பெருமளவில் கூட்டம் கூடி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், ஒவ்வொரு பகுதிக்கும் இத்தனை பேர் தான் என முன்னதாக திட்டமிட்டு, நான்கு இடங்களில் பகுதி பகுதியாக பக்தர்கள் பிரித்து அமர வைக்கப் பட்டனர். தபோவன தன்னார்வலர்கள் பலர் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள்.