அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்துவதற்கான சிறப்பு பிரிவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்த கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து தீபத் திருவிழா உற்சவத்தில் வளம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் பெரிய தேர் புனரமைக்கப்பட்டு வருகின்ற 8 ம் தேதி வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் டிசம்பா் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.
ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் , தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.
மகா தீபம் ஏற்றுவதற்கு 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். தூய நெய்யை வேலூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது .
மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதனை இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது. நெய் காணிக்கையை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நெய் காணிக்கை செலுத்தும் கூடுதல் சிறப்பு பிரிவுகள் கோயிலில் முக்கிய இடங்களில் துவக்கப்பட உள்ளது.
தற்போது ஆவின் நெய் ஒரு கிலோ ₹ 700 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .ஆனால் கொள்முதல் விலையை விட பக்தர்களிடம் குறைவான தொகை பெறப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ நெய் ரூபாய் 250 ,அரை கிலோ நெய் ரூபாய் 150, கால் கிலோ நெய் ரூபாய் 80 என பழைய விலையிலேயே காணிக்கை தொகை கோவில் நிர்வாகம் பெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து வரவேற்றுள்ளனர்.
மகா தீபம் ஏற்றுவதற்கான காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மார்கழி திருவாதிரை அன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு தீபச்சுடர் தீப மை பிரசாதம் வழங்கப்படும்.
மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம் ,கோமதி குணசேகரன் ,மேலாளர் செந்தில், பிஜேபி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .