கடை மற்றும் வணிக நிறுவன வாடகை ஜிஎஸ்டி சம்பந்தமாக உண்மைத் தன்மையை மறைத்து வியாபாரிகளை அச்சுறுத்தும், போராடத் தூண்டும் வணிகர் சங்கங்களை கண்டிக்கிறோம் என்று, இந்து வியாபாரிகள் நல சங்க மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
மத்திய அரசுக்கு எதிரான சிந்தனையை வியாபாரிகள் மத்தியில் ஏற்படுத்தும் சில அமைப்புகளும், திமுகவின் விசுவாசிகளும் ஜிஎஸ்டி சம்பந்தமாக உண்மை நிலையை மறைத்து வியாபாரிகளை தூண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
உண்மை நிலையை கடைக்காரர்களுக்கு கொண்டு செல்வது இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலையாய கடமை என்பதால் நாங்கள் விளக்கம் கூறுகிறோம்.
வீட்டு வாடகைக்கு ஜிஸ்டி கிடையாது,
தொழில் வருமானம் சம்மந்தப்பட்ட கட்டிடங்களின் வாடகைக்கு மட்டுமே ஜிஸ்டி உண்டு. அதிலும் வருமானம் ஈட்டும் கட்டிட உரிமையாளர் வருமானம், வருடத்திற்கு 20 இலட்சத்திற்கு மேல் சென்றால் மட்டுமே ஜிஸ்டி வரம்பிற்குள் அந்த கட்டிட வாடகை வரும். அதனை விடுத்து, அந்த கட்டிட உரிமையளருடைய மொத்த வருமானம் 20 இலட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில், வாடகை மீதான ஜிஸ்டி பற்றிய கவலை தேவையில்லை.
ஒருவேளை வாடகைக்கு குடியிருப்பவர் ஜிஸ்டியில் பதிவு செய்திருப்பவராக இருந்தும், அவருடைய வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவாக இருந்து (அதே சமயத்தில் கட்டிட உரிமையாளரின் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவானதாக இருந்தால்) வாடகை மீதான ஜிஸ்டி பற்றிய கவலையே தேவையில்லை. பல சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் செய்வோர் இந்த தகுதியில் வந்துவிடுவர்.
வாடகைக்கு இருப்பவர் மற்றும் கட்டிட உரிமையாளர் இருவரின் வருமானமும் 20 இலட்சத்தினை தாண்டும் பட்சத்தில், வாடகை மீதான 18% ஜிஸ்டி கட்டிட வேண்டும். அதுவும் வியாபாரிகளை பாதிக்காத வகையில் ஐடிசி முறையில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த விஷயத்தை எந்த கட்சியினரும், சங்கங்களும் கடைக்காரரிடம் கூறுவது கிடையாது.
வாடகைக்கு இருப்பவரின் வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவாகவும், கட்டிட உரிமையளரின் வருமானம் 20 இலட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தால் மட்டுமே வாடகைக்கு குடியிருப்பவருக்கு பிரச்சனை ஏற்படும், ஏனெனில் வாடகை மீதான 18% ஜிஸ்டி செலுத்த வேண்டியதிருக்கும், செலுத்திய பின்னர் அதனை குடியிருப்பவரால் திரும்ப பெற இயலாது (ஆனால் இவ்வகையான விஷயங்கள் மிகக் குறைவுதான்).
ஆனால் இந்த விஷயமானது தொழில் செய்யும் அனைவர் மத்தியிலும் ஒரு பயத்தினை ஏற்படுத்தும்படியாக பரப்பப்படுகிறது.
உண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள GST பெரும்பாலானோர்களைப் பாதிக்காது.
ஆனால் ஜிஸ்டிக்குள் வராத வாடகைக்கு குடியிருப்பவர், ஜிஸ்டிக்குள் இருக்கின்ற பில்டிங் ஓனர் என்ற நிலையில்தான் வாடகைக்கு குடியிருப்பவருக்கு பிரச்சனைகளைத் தரவல்லது. இதற்கும் சரியான தீர்வினை மத்திய மாநில அரசு கொண்டுவரவேண்டும்.
மற்றபடி வழக்கமாக மத்திய அரசின் மீது பரப்பப்படும் பெரும் பொய்கள் போலவே, இவ்விஷயமும் உள்ளது. இதில் மாநில அரசுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இதுவரை தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஜிஎஸ்டி கூட்டத்தில் கடைக்காரர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. அதனை மறைத்து மத்திய அரசை மட்டும் குற்றம் கூறி மத்திய அரசுக்கு எதிரான சிந்தனையை கடைக்காரர்கள் மத்தியில் உருவாக்க திமுகவின் அனுதாபிகள் முழுமூச்சாக செயல்படுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போன்றது.
எனவே ஜிஎஸ்டி சம்பந்தமாக முழுமையாக தெரிந்தும் கூட வியாபாரிகளை தூண்டி குளிர் காய நினைப்பவர்களை இந்து வியாபாரிகள் நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
வியாபாரிகள் தாங்கள் உண்மையாகவே ஜிஎஸ்டி கட்டுவதால் பாதிக்கப்படுகிறோமா? என்று சிந்தித்து செயல்படுதல் நல்லது.