நிவாரண உதவி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க அன்புமணி கோரிக்கை

சென்னை:
கடலூரில் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உடமைகளையும், பயிர்களையும் இழந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியமும் பாரபட்சமும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரழிவை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு பதிலாக, நிவாரண உதவி வழங்குவதிலும் ஊழல் செய்ய ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்டமும் ஒன்றாகும். மூன்று கட்டங்களாக பெரும் மழை பெய்த நிலையில் அனைத்துக் கட்டங்களில் பாதிக்கப் பட்டது கடலூர் மாவட்டம் தான். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் கவுரவமாக வாழ்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தரவில்லை. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை மற்றும் பணப் பயிர்கள் மழை&வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் இந்த வெள்ள பாதிப்பை சமாளிக்க முடியாது.
இத்தகைய சூழலில் தமிழக அரசு வழங்கும் நிவாரண உதவியை வைத்து தான் நிலைமையை ஓரளவாவது சமாளிக்க முடியும். ஆனால், ஒரு ஏக்கர் நெல்லுக்கு விவசாயிகள் ரூ.25,000 இழப்பீடு கோரியிருந்த நிலையில், தமிழக அரசோ ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு அறிவித்திருக்கிறது. மற்ற பயிர்களுக்கான இழப்பீடும் கூட விவசாயிகள் கோரியதில் பத்தில் ஒரு மடங்கு என்ற அளவில் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த இழப்பீட்டைக்கூட முறையாக வழங்க தமிழக அரசு தயாராக இல்லை.
கடலூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் வெறும் பதராக மாறிவிட்டன. அவை எதற்கும் பயன்படாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், பதராக மாறிய நெல்லை சேதமடைந்தவையாக பதிவு செய்ய மறுக்கின்றனர். அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான பயிர்களும், அவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்களின் பயிர்களும் வெள்ளத்தில் சேதமடைந்து விட்டதாக பதிவு செய்யும் அதிகாரிகள், உண்மையாகவே சேதமடைந்த பயிர்களை பதிவு செய்ய மறுக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் கிராமம், கிராமமாக அழித்தது. அப்படியானால் ஒரு ஊரில் ஒருவருக்கு சொந்தமான பயிர் அழிந்திருந்தால், அவ்வூரைச் சேர்ந்த மற்றவர்களின் பயிர்களும் அழிந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியினர் கூறும் வயல்களில் மட்டுமே பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், மற்றவர்களின் வயல்களில் இருந்த பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் பதிவு செய்வது எந்த வகையில் சரியானதாக இருக்கும் என்பது புரியவில்லை.
காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய நான்கு ஒன்றியங்களில் பழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடலூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனராக பணியாற்றி வரும் இளங்கோவன் தான் அனைத்து குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணம் என உழவர்கள் குற்றஞ்சாற்றியுள்ளனர். இவரைக் கண்டித்து அவரது அலுவலகத்தை உழவர்கள் முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று கூட நிவாரண உதவி வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து காட்டுமன்னார்கோயில் லால்பேட்டையில் உழவர்கள் போராட்டம் நடத்தினர். வேளாண்துறை துணை இயக்குனராக பணியாற்றும் இளங்கோவன் கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதவியாளராக இருந்தவர். அந்த அடிப்படையில், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு, திமுகவுக்கு ஆதரவாக தேவையில்லாத குழப்பங்களை இவர் உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கு உரிய நிவாரணம் வழங்குவது தான் அறம் ஆகும். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், நீண்ட கால பயிர்களுக்கு ரூ. 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற மக்களுக்கும் அவர்களின் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தேவையற்ற குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமான கடலூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனர் இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.