இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

Published:

vaiko protest - 2026

திருச்சி: காவிரி உரிமை மீட்பு தொடர்பாக, விவசாயிகளின் சார்பில் தண்ணீர் அருந்தாப்போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, தண்ணீர் அருந்திய வைகோ, பின்னர் அது வெந்நீர் என்று விளக்கம் அளித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தண்ணீர் அருந்தா போராட்டத்தின் போது, கட்சிக்காரர்கள் தனக்கு அளித்த ஒரு டம்ளர் தண்ணீரை மடக் மடக் என்று குடித்தார் வைகோ. பின்னர், அண்ணே இது தண்ணீர் அருந்தா போராட்டம்ணே என்று அருகில் இருந்த நிர்வாகிகள் அவருக்கு எடுத்துக் கொடுத்தனர்.

அதனால் சற்று நெளிந்த வைகோ, பின்னர் தான் பேசிய போது, இது தண்ணீர் அருந்தாப் போராட்டம்னு ஒரு பயலும் நோட்டீஸ கொண்டாந்து என்கிட்ட காண்பிக்கலே. நான் தண்ணீர் குடிக்கலே… வெந்நீர் குடிச்சேன். அதுக்குப் பிறவுதான், இந்தாங்கண்ணே என்று நோட்டீஸ காட்டினாங்க. அத முன்னாடியே காட்டியிருந்தாங்கன்னா… நான் இந்த வெந்நீரக் கூட குடிச்சிருக்க மாட்டேன்.

பத்திரிகைக்காரங்க, ஊடகங்கள்லாம் இருக்காங்க. அவங்கபாட்டுக்கு பெரிசா… வைகோ தண்ணீர் குடிக்காப் போராட்டத்தின் போது தண்ணீர் குடிச்சார்னு போட்டிறப் போறாங்க… என்றெல்லாம் தானாக முன்வந்து மைக் பிடித்து விளக்கம் அளித்தார் வைகோ.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தா போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டக் களத்தில்தான் இந்தக் கூத்து நடைபெற்றது. போராட்டத்தின் பெயரை கொட்டை எழுத்துகளில் கண்ணில் எல்லா இடத்திலும் படும் வகையில் பேனர்களாக வைத்திருந்தார்கள். எனவே எவர் கண்ணுக்கும் இது படாமல் இருக்காது. ஆனாலும் சமாளிப்பதற்காக ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி, வக்கீல் வைகோ என்பதை நிரூபித்தார்.

என்ன போராட்டம் ஏது போராட்டம் என்றெல்லாம் கேட்காமல் ஏதாவது மேடை போட்டால் போதும், மைக் கிடைத்தால் போதும்… திட்டித் தீர்ப்பதற்கு மத்திய அரசும் மோடியும் இருக்கிறார்கள் என்ற எல்லா மேடைகளிலும் ஒரே பல்லவியைப் பாடுவதற்கு தயார் செய்து வந்திருக்கும் போது, தண்ணி அருந்தாப் போராட்டம்லாம் வைகோவின் கண்ணில் படப் போகிறதா என்ன?

ஆனாலும் ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்தப் போராட்டத்தில், வைகோ,வுடன் ஜி.கே.வாசன், காதர் மொய்தீன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img