‘ரஜினி எனக்கு நண்பர் இல்லை. அவர் குருமூர்த்தி போன்றவர்கள் எழுதிக் கொடுப்பதைப் படிப்பவர். பொதுவாகவே நடிகர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பிப்பவர்கள். சுயமாக சிந்திக்கத் தெரியாது’ என்று பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பேட்டியில், ‘தமிழகத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது. வெளிமாநிலத்திலிருந்து வரும் பாஜக-வினரை வரவேற்று உபசரிக்கும் இடமாகத்தான் தமிழக அலுவலகம் உள்ளது. ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ எந்த ஒரு விஷயத்தையும் தமிழக பாஜக நடத்துவது இல்லை.
கர்நாடக தேர்தலில் 115 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்’ என்றார். மேலும், ரமலான் மாதம் முதல் அமர் யாத்திரை வரை ராணுவம் காஷ்மீரில் தனது யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா கோரிக்கை குறித்துக் கேட்டதற்கு, அங்கு ராணுவ ஆட்சித் தான் வர வேண்டும் என்றார்.
கடந்த நான்கு வருடங்களாக பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லையே என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டதற்கு, ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை உள்ளவர். அவர் பிறரை ஏமாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே பெயிலில் இருக்கிறார். தனது படிப்பிலும் பல பாடங்களில் பெயில் ஆனவர். அவருக்கு என்ன தெரியும்? என்றார்.
மேலும் அவர், ‘தமிழக அரசியல்வாதிகள் காவிரித் தண்ணீர் வருவது குறித்து விரும்பாதவர்கள். அவர்கள் தண்ணீரை வணிகம் செய்யும் முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு காவிரி நீர் தேவையில்லை என நினைப்பவர்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினாலே தமிழகத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். தமிழக அரசியல்வாதிகள் எந்த ஒரு திட்டத்திற்கும் மத்திய அரசை வலியுறுத்திப் பெறுவது கிடையாது. நீட் தேர்வு விஷயங்களில் என்னை யாரும் எதற்கும் தொடர்பு கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகள் பலம் பெறவே உதவுகிறது. பாகிஸ்தானில் மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் சென்று பேசியதிலிருந்தே தெரிகிறது. பாகிஸ்தான் உதவியோடு பாஜக-வைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது. கர்நாடகத் தேர்தலில், காங்கிரஸ் சமுதாயப் பிரிப்பு வேலைகளில் ஈடுபடுவதால் மக்கள் காங்கிரஸ் மீது வெறுப்போடு இருக்கின்றனர். பாஜக கர்நாடகாவில் 115 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும்’ என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் போலி என்கவுண்டர்கள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே? என்ற கேள்விக்கு, இது குறித்து உபி முதல்வரிடம் கேட்டதற்கு, அவர் நடக்கவில்லை என்கிறார். யாராவது வழக்குப் போட்டால் அது குறித்து மேற்கொண்டு செயல்படத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




