கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!

ஆன்மிகச் செய்திகள் கோவை லைஃப் ஸ்டைல்
karamadai perumal ther - 2026
காரமடை மாசித் தேரோட்டம்: இன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேரில் எழுந்தருளிய அரங்கநாதப் பெருமாள்

கோவை மாவட்டம் காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காரமடையில், புகழ்பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் மாசிமக திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி இரவு உத்ஸவர் அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 24-ஆம் தேதி இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண உத்ஸவம் அதிகாலை 5.30க்கு தொடங்கி நடைபெற்றது. இதை முன்னிட்டு, பெட்டதம்மன் மலை குகையில் இருந்து அம்மன் அரங்கநாயகி தாயார் அழைத்துவரப்பட்டார். கோவிலில் அரங்கநாயகி தாயார் சந்நிதி முன் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்கநாதப் பெருமாள் வீற்றிருந்தார்.

மஞ்சள் இடித்தல், கங்கணம் கட்டுதல், பூணூல் அணிவித்தல் உள்ளிட்ட வைபவங்களுக்குப் பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு யானை வாகன உத்ஸவம் நடைபெற்றது.

காரமடை ரங்கநாதர் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக் கிழமை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை 7 மணிக்கு அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் காரமடைக்கு வந்துள்ளனர்.

karamadai ther - 2026
தயார் நிலையில்… காரமடை தேர்…

கடந்த ஆண்டு தேரோட்டத்தின்போது சமூக விரோதிகள், தேரின் மீது கற்கள் எறிந்து, மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தினர். இது குறித்த வீடியோக்கள் சமூகத் தளங்களில் வைரலாகி, பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனால் இந்த வருட தேரோட்ட நிகழ்வில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை – காரமடை, மேட்டுப்பாளையம் – காரமடை, அன்னூர்-காரமடை இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.