
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட 11 அல்கொய்தா பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாதிலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வுத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மேற்கு வங்கத்தில் 6 பேரும், கேரளாவில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், அதில் அப்பாவி மக்களை கொல்லவும் சதி திட்டம் தீட்டியதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அதே கும்பலை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இந்த 11 பேருக்கும் முர்ஷித் ஹசன் என்பவர் தலைமை தாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிக்கும் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
முர்ஷித் ஹசனும் அவரது மற்ற கூட்டாளிகளும் மேலும் சில இளைஞர்களை அல்கொய்தாவில் இணைக்க திட்டம் தீட்டி வந்ததும் அம்பலமாகியுள்ளது. பிடிபட்ட நபர்களும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களில் தீவிரமயமாக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் ஆயுதங்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இஸ்லாமியர்கள் அல்லாத பிற மக்களை தாக்கவும் இந்த 11 நபர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.