புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்: ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை

Published:

E_V_K_S__Elangovan சென்னை: புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத் தொழிலாளி மகாலட்சுமி என்பவர் புலியால் தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் மரணமடைந்தார். அந்த பகுதியிலுள்ள மக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மகாலட்சுமியை இன்று இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வனப்பகுதிகளின் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானையின் தாக்குதல், புலியின் தாக்குதல் எப்போது நேரிடுமோ என பதற்றத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறி விவசாய பயிர்களை அழிப்பதும், குடியிருப்பு பகுதிகளில் மக்களை அச்சுறுத்துவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டும். கேரள மாநிலத்தில் புலி தாக்கி இறந்த நபரின் குடும்பத்தினருக்கு கேரள மாநில முதலமைச்சர் சிறப்பு செயல்பாட்டினால் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் மகாலட்சுமி குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு அரசாங்க வேலை வழங்கும்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும், வனவிலங்குகளிடமிருந்து மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை கோரி கூடலூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் வன்முறையை ஏவிவிட்டு அடக்குமுறையை கையாண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் மக்கள் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியினர் முன்னிலைப்படுத்தி போராடுவதை சகித்துக் கொள்ளாத ஆளுங்கட்சியினர் அரசியல் உள்நோக்கத்தோடு அவர்கள் கொடுக்கும் பட்டியலின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட நிரபராதிகளை கைது செய்து பழிவாங்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக காவல்துறையினர் கைவிட வேண்டும். புலி தாக்கி இறந்த மகாலட்சுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை யெனில் கூடலூர் பகுதி மக்களை திரட்டி அந்தப் பகுதியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். பிரபு அவர்களுடன் இணைந்து நானே தலைமையேற்று போராட்டம் நடத்திட நேரிடும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

  • என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img