கிருஷ்ணகிரி: ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ராமுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.
அந்த பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ராமு பெட்ரோல் பங்கில் முறைகேடு நடப்பதாகக் கூறியுள்ளார். அந்த முறைகேட்டில் இருந்து விடுவிக்க பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் 24 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இதை அடுத்து, அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அருகிலுள்ள உணவகத்தில் வந்து பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து ஓட்டலுக்குச் சென்ற ராமு, பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




