நெல்லை: இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடம் என்று பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது 11 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவு படுத்தும் விதமாகவும் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் உள்ள 11 காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோகன் சி லாசரஸ், இந்து கோவில்கள் மற்றும் கடவுள்கள் குறித்துப் பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடமாக குறிப்பிட்டுப் பேசியுள்ள அவர், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் சாத்தானின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக கும்பகோணத்தில் சாத்தான் அதிகளவில் கோபுரங்கள் அமைத்து குடி கொண்டிருப்பதாகவும், இத்தனை கோவில்கள் ஏன் என்றும் கேட்டிருந்தார்.
இதே போன்று காஞ்சி சங்கர மடத்திற்கு தாம் சென்றதையும் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு பட்டுச்சேலைகளையும், வேட்டிகளை எரித்து யாகம் செய்யப்படுவதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியதாக மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கருமத்தப்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கன்னியாகுமரி தக்கலை, பூதப்பாண்டி, அஞ்சுகிராமம், கோட்டாறு, சுசீந்தரம், இட்டாமொழி காவல் நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், குரும்பூர் ஆகிய காவல் நிலையங்களிலும் மோகன் சி லாரசஸ் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள இட்டமொழி, கோட்டார், தக்கலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பிற மதங்களை அவதூறாகப் பேசுதல் என்ற பிரிவின் கீழும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், குரும்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பேச்சாலோ எழுத்தாலோ மத, ஜாதி, இன, மொழி விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல், தனி மனித மதசுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
*
கோவையில் உள்ள சூலூர், கருமத்தப்பட்டி, பொள்ளாச்சி ஆகிய காவல் நிலையங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துதல், ஒரு மத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் மோகன் சி லாசரஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




