திருவனந்தபுரம்: சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து சபரிமலையில் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருக்கிறது கேரள அரசு.
கேரள முதல்வர் பிணரயி விஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
வரும் கார்த்திகை மாதம் முதல் நாள் (நவ.16) முதல் சபரிமலை நடை திறக்கப்படும். அதைத் தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கும். தொடர்ந்து 42 நாட்கள் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவியத் துவங்குவர். இந்தக் காலத்திலும் பெண்கள் வரக் கூடும் என எதிர்பார்க்கப் படுவதால், பக்தர் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நாள் ஒன்றுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கணக்கிட ஆன்லைன் மூலம் அனுமதியை வழங்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ளதைப் போல், ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப் படும் பட்சத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறப் பட்டுள்ளது.




