திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பருவ வயது உள்பட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, கேரளத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு, தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கைப்பொம்மையான தேவசம் போர்டு, அரசின் குரலை எதிரொலித்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போது அரசுத் தரப்பு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கூறியிருப்பதால், தேவசம் போர்டும் அத்தகையை முடிவையே அறிவிக்கக் கூடும்.
முதலில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறி வந்த தேவசம் போர்டு, பின்னர் தீர்ப்பை தாமதமின்றி நிறைவேற்ற உள்ளதாகக் கூறியது. இடையில், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் நேற்று போராட்டங்களும், பேரணிகளும் களை கட்டினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்ற ஒரு எழுச்சியை கேரளம் சந்திக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். அதன் மூலம், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைத் திருத்தும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில், சபரிமலை பக்தர்கள் சார்பில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பல இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சபரிமலை தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. சபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு செய்து தரப்படும்.
கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப் பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சபரிமலை செல்ல விரும்பும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார்.
கேரள முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதால், சபரிமலை தேவசம் போர்டும் இத்தகைய முடிவையே மேற்கொள்ளக் கூடும் என்பதால், தனி நபர்களும் இந்து இயக்கங்களுமே மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றன.




