
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றார்
மேலும், புயல் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று இரவு 2 மணி அளவில் 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது என்றும், புயல் மழை காரணமாக இது வரை 11 பேர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர், புயல் வரும் முன்பாகவே தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், 421 முகாம்களில் 82 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு கண்காணித்து வருகிறது. மாலை வரை புயல் தாக்கம் இருக்கும் என்பதால் சேத விவரத்தை முழுமையாக தெரிவிக்க இயலாது என்றார்.
புயலால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றப் பட வேண்டும் என்றும், அதற்கு 7 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயாராக உள்ளது என்றார்.
மக்களை பாதுகாக்க ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரையும், உத்தரவும் பிறப்பித்துள்ளோம். மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.



