பழனி கோயிலில்… கண்ணீர் மல்க பக்தர்களின் முருக தரிசனம்!

Published:

Palani
Palani

பழனி கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. அரோகரா அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் கண்ணீர்மல்க முருகனை தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி, அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடு. இந்த பழனி முருகன் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பழனி கோவிலில் பக்தர்கள் சாமிதரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 50 பக்தர்கள் வரை ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

தரிசன அனுமதிக்காக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இணையதள முகவரி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில்களில் அனுமதிக்கப்படுவது இல்லை‌. படிப்பா தை வழியாக செல்லும் பக்தர்களுக்கு முன்னதாக பாதவிநாயகர் கோவில் அருகே கிருமிநாசினி கொடுத்து முகக் கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பழனி திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று சரணகோஷம் முழங்க கண்ணீர் மல்க முருகனை வழிபட்டனர்.

  • செய்தி : கார்த்திகேயன், பழனி

Related articles

Recent articles

spot_img