
அருப்புக்கோட்டையில் பரபரப்பு…
ஆக்கிரமிப்பு கோவிலை அகற்றச் சென்ற அதிகாரிகள். தீக்குளிக்க முயன்ற பக்தர்கள்…..
அருப்புக்கோட்டை :
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணிநகரம் பகுதியில், உச்சி செட்டியார் கோவில் தெருவில், சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த கோவிலுக்கு, பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் வருவார்கள். பல்வேறு சமுதாய மக்களின் நன்கொடைகள் மூலம், சில மாதங்களுக்கு முன்பு தான் சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக, அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு தொடுத்த நபருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில்,
கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், அதனை இடித்து அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கோவிலை அகற்றுவதற்காக சென்றனர்.
இதனையறிந்த அந்தப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து கோவிலைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். கோவிலை இடிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது.
பதற்றம் அதிகரித்ததால், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
விரைந்து செயல்பட்ட போலீசார் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகாரிகள் அங்கு கூடியிருந்த மக்களிடம் விளக்கமாக எடுத்துக்கூறி சமாதானம் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.