
தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை அண்மையில் வெளியிட்ட திமுக பைல்ஸ் நிகழ்வுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அதை தொடர்ந்து தமிழக நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு கணக்கு வழக்கு தெரியாமல் என்ன செய்வது என்று புரியாமல் முதல்வர் மு க ஸ்டாலினின் மகனும் மருமகனும் திண்டாடுகிறார்கள் என்று பேசியதும் ஆடியோ பதிவு வெளிவந்து மேலும் பரபரப்பை கூட்டின.
இந்த நிகழ்வுக்கு பின்னர் மதுரையில் திமுகவின் இன்னுமொரு அணியாக இருந்து செயல்பட்டு வந்த பழனிவேல் தியாகராஜனின் செல்வாக்கு திமுகவில் சரியத் தொடங்கியது. அவரை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்காமல் திமுகவினர் தவிர்த்து வந்தனர். இதனால் நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் ஒதுங்கிய இருந்தார் பழனிவேல் தியாகராஜன்.
மேலும் அவர் மிக முக்கியமான நிதி அமைச்சர் பதவியில் இருந்து முக்கியத்துவம் இல்லாத ஐடி துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் மதுரை திமுக., வில் அவரது செல்வாக்கு மேலும் சரிந்தது. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து அமைதியாக இருந்து வந்தார் தியாகராஜன்.
இத்தகைய சூழலில், நேற்று இரவு, மதுரையில் நகர் திமுக., சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவேயில்லை. இருப்பினும் முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலு, கூட்டத்தில் தியாகராஜனையும் பேச அழைக்குமாறு கூறினார். எனினும் தியாகராஜனை கடைசி வரை பேச மதுரை திமுக.,வினர் அழைக்கவேயில்லை.
நாம் சொல்லியும் தியாகராஜனே மேடையில் பேசுவதற்கு ஏன் இவர்கள் அழைக்கவில்லை என்று மண்டையை பிய்த்துக் கொண்ட எ.வ.வேலு, மதுரை அரசியல் நிலவரத்தை ஒருவாறு புரிந்துகொண்டார். மேடையில் தாம் பேச வந்த போது, “தியாகராஜன் பேச வேண்டிய நேரத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று ஒருவாறு சமாளித்து, மதுரை உள்கட்சிப் பிரச்னையைப் பூசி மெழுகிச் சென்றார்.
இருந்தபோதும், அமைச்சர் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாத விஷயம், மதுரையில் அவரது ஆதரவாளர்களை பெரும் அதிருப்தியில் தள்ளியுள்ளது. அது எந்த நேரமும் வெடிக்கக் கூடும் என்று மதுரை கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.