விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யில் உள்ள அருள்மிகு ஸ்ரீ துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீதிருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆடித்தபசு விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு சிம்ம வாகனம் , குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர்.
இந்நிலையில், 10ம் நாள் நிகழ்ச்சியான தபசு நிகழ்ச்சியானது திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
துணைமாலை அம்மன் தபசு மண்டபத்தில், திருமேனிநாதரை அடைவதற்காக தவம்
மேற்கொண்டதாகவும், அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்து, திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு
காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் திருமேனிநாதருக்கும, துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மன் சுவாமியை மூன்று முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது.
அம்பாள் பூரண சந்தோஷத்துடனும், பகவான் மன நிறைவுடனும் குண்டாற்றில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியே ஆடித்தபசு எனப்படுகிறது.
மேலும், ஆடித்தபசு விழாவைக் காணும் போது பக்தர்கள் தங்கள் பிரச்சனைகள் தீர்வதாகவும், திருமண தடை நீங்குவதாகவும், குழந்தை பாக்கியத்தடை நீங்குவதாகவும் நம்பி வழிபடுகின்றனர்.
இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு திருக்கோவிலைச் சென்றடைந்தனர்.
தபசுத் திருவிழாவைக் காண விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.
தபசுத் திருவிழாவை முன்னிட்டு திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.