விசுவ ஹிந்து பரிஷத், விருதுநகர் சார்பாக ஆக.24 சனிக்கிழமை அன்று, தனியார் பள்ளியில் நடந்த ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சியில் குழந்தைகள் ஸ்ரீ க்ருஷ்ணர், ஸ்ரீ ராதை வேடம் அணிந்து கண்ணனின் பாடல்களை மழலை குரல்களில் பாடி அசத்தினார்கள்.
பள்ளிக்கூடத்தின் ஆசிரியைகள் கண்ணனை சிறப்பாக அலங்கரித்து திருவடிகளைக் கோலமிட்டு வரைந்து கண்ணனுக்கு சீடை, மைசூர் பாகு, முருக்கு, அதிரசம், லட்டு ஆகியவற்றை படைத்து அனைத்து குழந்தைகளுக்கும் பிரசாதமாக வழங்கினார்கள்.
குழந்தைகள் அனைவருக்கும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பிலே சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பாக பாட்டு பாடி, வேடம் அணிந்த குழந்தைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்துவ, இசுலாமிய குழந்தைகளும் ராதை வேடம் கண்ணன் வேடம் அணிந்து அந்தந்த பாடல்களும் பாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சி பலரையும் கவர்ந்திருந்தது.
நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி ஆசிரியைகளுக்கும், நடுவர்களுக்கும், விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.