
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயில் உள்ளது.
தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை பாசத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய 15 ம் நூற்றாண்டை சேர்ந்த சிறப்பு வாய்ந்த அக்கோயிலில் நல்லதங்காள் அம்மன் உருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலில் அம்மன் உருவில் எழுந்தருளிய நல்லதங்காள் சிலையை கடந்த 18 தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தியதுடன் உண்டியல் பணத்தையும் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் கோயில் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். குற்றவாளியை சில தினங்களில் கைது செய்து விடுவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். பல்வேறு நபர்களிடமும் விசாரணை செய்தனர். ஆனால் குற்றவாளி யாரும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
இதனால் கோபமுற்ற கிராம மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் ஊரின் பிரதான சாலையில் திரண்டு பி எம் டி மக்கள் பாதுகாப்பு படை தலைவர் இசக்கி ராஜா என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும், குற்றவாளிகளை 19ஆம் தேதிக்குள் கண்டுபிடிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.