
வைகை எக்ஸ்பிரஸில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு .. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா…
பயணிகளின் வசதிக்காக மதுரை – சென்னை – மதுரை வைகை மற்றும் காரைக்குடி – சென்னை – காரைக்குடி பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.
தென்காசி நெல்லை விருதுநகர் மக்கள் வைகையில் பயணிக்க வசதியாக செங்கோட்டை மதுரை இடையே இணைப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
மதுரை – சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
அதேபோல காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவற்றில் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
இதற்காக இந்த ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த ரயில்கள் 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 12 முன்பதிவுள்ள இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.
இந்த நிலையில் தென்காசி நெல்லை விருதுநகர் மக்கள் வைகையில் பயணிக்க வசதியாக செங்கோட்டை மதுரை இடையே இணைப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரையில் இரவு வைகை ரயில் வந்தவுடன் செங்கோட்டை சென்று அதிகாலை செங்கோட்டையில் புறப்பட்டு மதுரைக்கு வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.