வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு

மதுரை:

வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 2 வது முறையாக 142 அடியை எட்டியது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டமும் உயர்த்தப்பட்டது. இதனால் வைகை அணையும் 4 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது.

இந்த இரு அணைகளில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு 5 மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மழை முற்றிலும் நின்ற நிலையில் அணையில் இருந்து தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

இன்று காலை நிலவரபடி பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.40 அடியாக உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 63.19 அடி. வரத்து 1531 கன அடியாகவும் திறப்பு 2160 கன அடியாகவும் இருந்தது.