

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஆவணி மூலத்திருவிழா, பங்குனி உத்திரத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கொடியேற்றம் இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகியது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேத பாராயண முறைப்படி கொடியேற்றம் நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையிலும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். 22-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பா நதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது.
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு செண்பகவல்லி அம்மன், பூவனநாதர், பலிபீடங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, கொடி ஏற்று விழா விமரிசையாக நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாநாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி வரும் 19-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.25 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், இதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.