
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது பாறையை உடைக்க வைக்கப்பட்ட வெடி, வெடித்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்.
கிணறு வெட்டும் ஒப்பந்த பணியை காலத்திடம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஊழியர்களுடன் மேற்கொண்டு வந்தார். கடந்த 10 தினங்களாக மண் பகுதியை தோண்டி எடுத்த தொழிலாளர்கள் இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து வைத்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டெட்ட நேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் என்ற 21 வயது தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார், படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிர் சாம்சன் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார்.
மற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த நிலையில் மூன்றாவது தொழிலாளி ஆனையப்ப புரத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் (50 ) 108 ஆம்புலன்சில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதனால் இந்த வெடி விபத்தில் பலியானார் எண்ணிக்கை மூன்றானது.
விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




