
நெல்லை உழவாரப் பணிக் குழுவினரின் சீரிய முயற்சியால், செண்பகராம நல்லூரில் கோயில் சீர் பெற்றது. இது குறித்து நெல்லை உழவாரப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தெரிவித்ததாவது…
இன்று 26.3.33 ஞாயிறு அன்று செண்பகராமநல்லூர் அருள்மிகுஜெகந்நாத பெருமாள் கோயிலில் தொண்டாற்றும் பேறு பெற்றோம். 26.4.23ல் பெருஞ்சாந்தி விழாவிற்கு இன்னும் நான்கு ஞாயிறுகளில் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். சிற்பிகள் விரைந்து செயலாற்ற இன்று உதவி நின்றோம்.
முதல் சுற்றில் சுவர் எழுப்பி மூடி வைத்திருந்த தென்புற வாசல் சுவரை இடித்து திறந்து புதிய நிலை அமைக்க உதவலானோம். பெருஞ் சுற்றிலுள்ள திருக்குளப் படிகள் அமைக்க ஒத்துழைத்தோம். இரவி மண்டபத்தில் மண் இட்டு மூடிக் கிடந்த மண்டப வழியினைத் திறக்க முயன்றோம். தாயார் பார்வையை மறைக்கும் மடப்பள்ளி வெளி அமைப்பைத் திறக்கலானோம்.
நாகர்கோவில் அன்பர்களும் உடன் வந்தனர். நண்பகல் உணவிற்குப் பின், கோவிலுக்கு வெளியே பின்புறமுள்ள விடுபட்ட திருக்குளப் பணியாற்றினோம். அடுத்து, வரும் ஞாயிறில் பெரிய மதில் வெளிப்புற சுவரில் மாணிக்கப் பட்டைகள் தீட்ட ஆயத்தமாக வேணாடுமென திட்டமிட்டுள்ளோம் என்றார்.