பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால், நிறுத்தப் பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி -திருநெல்வேலி – பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னர் நிறுத்தப் பட்ட செங்கோட்டை கொல்லம் செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா தமிழ்நாடு ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை தினசரி இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச்செல்லும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் சார்பில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயிலை நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பி.,க்கள் குழு மற்றும் தமிழக கேரளா ரயில் பயணிகள் சங்கத்தினர் வர்த்தகர்கள் பல்வேறு நிலைகளில் வலியுறுத்தி வந்தும் இந்த வண்டி நிறுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த ரயில் மீண்டும் இயக்குவதற்கான எந்த நடவடிக்கையும் மதுரை கோட்ட ரயில்வே தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
விரைவில் கொல்லம்- செங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் ஏற்கெனவே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கி வந்த கொல்லம் – திருநெல்வேலி – கொல்லம் இரு ரயில்களையும் மீண்டும் இயக்கவும், கொல்லம் – செங்கோட்டை – விருதுநகர் – கோவை இடையே இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கவும், செங்கோட்டை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய ரயிலை கொல்லம் – ராமேஸ்வரம் இடையே மீண்டும் இயக்கவும் கேரளா எம்பி பிரேமச்சந்திரன் தென்னக ரயில்வேயிடம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக எம்பி.,க்களும் ஒன்றாக இணைந்து இந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்.
நூறாண்டுகளுக்கு முன்பு செங்கோட்டை – புனலூர் இடையே மலைவழிப்பாதையில் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு முதன்முதலாக திருவனந்தபுரம் – சென்னை ரயிலும், கொல்லம் – செங்கோட்டை ரயிலும் அப்போதைய திருவாங்கூர் மன்னரால் துவக்கி வைக்கப்பட்டது.
தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், சில காலமாக இந்த ரயில் கொல்லம் – செங்கோட்டை – கொல்லம் வரை இயங்கி வந்தது. ஆனால் போதிய வருவாய் இல்லை என காரணம் காட்டி கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில், மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில், புனலூர்- குருவாயூர் பயணிகள் ரயில் மூன்றையும் இணைத்து மதுரை – குருவாயூர் என ஒரே எக்ஸ்பிரஸ் ரயிலாக தென்னக ரயில்வே இயக்கி வருகிறது. இது பயணிகளுக்கு உதவிகரமாக இருந்தாலும், பாரம்பரியமாக இயங்கி வந்த செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை ரயில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, தென்காசி, விருதுநகர், கொல்லம் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
.