
பயணிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, ஏசி பெட்டிகளைக் கூட்டியும் ஸ்லீப்பர் பெட்டிகளைக் குறைத்தும் வெளியிட்ட அறிவிப்பை தென்னக ரயில்வே திரும்பப் பெற்றது.
வருகின்ற ஆகஸ்ட் 02/08/2025 முதல் சென்னையிலிருந்தும் (12661) 03/08/2025 முதல் செங்கோட்டையிலிருந்தும் (12662) புறப்படுகின்ற பொதிகை அதிவேக ரயில்களில் 3 ஏசி வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 5 லிருந்து 6 ஆக கூட்டப்பட்டும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 8 லிருந்து 7 ஆக குறைக்கப்படும் என்ற தெற்கு ரயில்வே அறிவித்திருந்ததற்கு பயணிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் இந்த முடிவை தற்போது தெற்கு ரயில்வே கைவிட்டது.
இதன் படி ஏற்கனவே தற்போது இயங்கும் ஏசி பெட்டிகள் மற்றும் முன்பதிவு தூங்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் நான்கு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,ஒரு முதல் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் இணைந்த தூங்கும் வசதி ஏசி பெட்டி , இரண்டு தல இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி ஏசி பெட்டிகள் தொடர்ந்து மாற்றமின்றி இயக்கப்படும். இதே போன்று நெல்லை விரைவு ரயிலிலும் வழக்கமான பெட்டிகளும் இயங்கும்.
தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை கைவிட வேண்டும்.





