பாவூர்சத்திரம் அருகே சண்டைக்கோழி திருடிய மூவர் கைது

பாவூர்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் கோழிகளைத் திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் கராத்தே ராஜேந்திரன்(35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப்பண்ணையில் சண்டைக்கோழி உள்பட பல்வேறு தரப்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு இவரது கோழிப்பண்ணையில் 32 கோழிகள் திருட்டுப்போனது. இதுகுறித்து கராத்தே ராஜேந்திரன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
 இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாவூர்சத்திரம் பழைய சந்தையில் பலதரப் பட்ட கோழிகளை 4 பேர் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
 போலீசைப்  பார்த்ததும் ஓட முற்பட்ட 4 பேரில் 3 பேரைப் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோழிப்பண்ணை அமைந்துள்ள கானாவூரைச் சேர்ந்த அந்தோணி(25), குத்தாலிங்கம்(30), மாரியப்பன்(31) என்பது தெரியவந்தது.
 இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 32 கோழிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செந்தில்க் குமார் என்பவரைத் தேடி வருகின்றனர்.