ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில் இயக்க வேண்டுகோள்

செங்கோட்டை:

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ரயில் மூலம் தென்காசி அல்லது செங்கோட்டையில் இறங்கி சுற்றுலா வாகனங்களின் மூலம் ஐயப்பனின் படை வீடுகளான அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா மற்றும் கொட்டாரக்கரை, சாஸ்தாங்கோட்டை சென்று தரிசனம் செய்துவிட்டு பத்தனம்திட்டா வழியாக பம்பை – சபரிமலை சென்று வந்தனர். அச்சங்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை உள்ளிட்ட தலங்கள் செங்கோட்டையில் இருந்து செல்லும் வகையிலேயே அமைந்துள்ளன. இங்கிருந்து கேரளப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஆனால், செங்கோட்டை வருவதற்கு, மற்ற மாநில மக்களுக்கு சென்னையில் இருந்து வரும் பொதிகை விரைவு ரயில் ஒன்றே தற்போது உள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட சென்னை-செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் தற்போது இயக்கப்படாததால் ஐயப்ப பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 5.20க்குப் பின்னர் ரயில் கிடையாது. செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு மாலை 6.30க்குப் பின்னர் ரயில்கள் இல்லை. எனவே, இரவு நேரத்தில் செங்கோட்டைக்கோ, மதுரைக்கோ பக்தர்கள் ரயிலில் பயணிக்க முடிவதில்லை. இதனால் ரயிலில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் செங்கோட்டை, மதுரை ரயில் நிலையங்களில் தங்கி மறுநாள் காலையில்தான் ரயிலில் பயணிக்கின்றனர்.

தற்போது அதிக அளவில் தமிழகம் மற்றும் வெளி மாநில பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை பெங்களூரு, சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்க வேண்டும் என தமிழக ஐயப்ப சேவா சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் அகல ரயில்பாதை அமைப்பதற்காக செங்கோட்டை-புனலூர் வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் தென்காசி, செங்கோட்டைக்கு ரயிலில் வந்து அங்கிருந்து சுற்றுலா வாகனம் மூலம் பயணிக்க வசதி இல்லாதவர்கள் பேருந்துகளுக்காக பல மணி நேரம் காத்திருந்து பிற வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.