கொரோனா வைரஸ் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியறை சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தனியார் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன. கேரள பேருந்து மற்றும் நீதிமன்றம் மருத்துவமனை செல்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்!
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்புக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் மாநிலம் கேரளம். இங்கே 3 பேர் சிகிச்சை பெற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள் என்றாலும், கொரோனா பரவலாக்கம் கேரளத்தில் அதிகரித்து வருகிறது. எனவே கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள், பெரிதும் கண்காணிக்கப் பட்டு, தடுப்பு மருந்து தெளிக்கப் பட்டு அனுமதிக்கப் பட்டன.
இந்நிலையில், இன்று காலை முதல் திடீரென கேரள தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு, கேரளத்துக்கே திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. நேற்று, கோழிகள் உள்ளிட்ட இறைச்சிகளை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே திருப்பி அனுப்பப் பட்டு வந்தன. இந்நிலையில் புளியறை சோதனைச் சாவடி வரை வந்து மீண்டும் கேரளாவுக்குச் செல்ல வேண்டியிருப்பது குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதுபோல், கேரளத்தில் மிக முக்கிய எல்லைப் பகுதியான கோவை மாவட்டத்திலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தேவையற்ற பயணங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தேவயற்ற வகையில் கேரளம், தமிழகத்துக்குள் அடிக்கடி பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், பேருந்து சேவைகளையும் பெருமளவில் நிறுத்தியுள்ளது மாநில அரசு. வரும் மார்ச் 31ம் தேதி வரை மிக முக்கியமான காலகட்டம் என்பதால், இதனை மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசைத் தொடர்ந்து, கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தவிர்க்கும்படி தமிழக அரசும் அறிவுரை வழங்கியது. கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இருந்து கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. பயணிகள் பயன்பாடு குறைவு காரணமாக கோவை, பொள்ளாச்சியில் 168 பஸ்களின் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.