தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை போல தென்மாவட்ட மக்கள் கந்தசஷ்டி விழாவில் அதிகளவில் கலந்து கொள்ளும் ஊராக ஆய்க்குடி விளங்கி வருகிறது.
இப்பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நாளான ஆறாம் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் சிவன் கோயில் மைதானத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.