திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, அரஹரோஹரா கோஷம் முழங்க பெருமானை தரிசித்து வழிபட்டனர்.
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. சஷ்டி விழா தொடங்கிய முதல் நாளில் இருந்தே கோவிலில் திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து வந்தனர். வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் பலர் இங்கே வந்து தங்கி விரதம் இருந்தனர்.
சூர சம்ஹார நிகழ்வு நாளான இன்று மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. யானை முக தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்து, தொடர்ந்து சிங்கமுகம் கொண்ட சூரனையும் பின் சுய முகம் கொண்ட சூரபத்மனையும் சம்ஹாரம் செய்த நிகழ்வு நடந்தது. சூரன் தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் மாற, அவற்றையும் வதம் செய்து, சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் அவற்றை தன் வாகனமாக்கி அருள் புரிந்தார்.
சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.




