
கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் பணிபுரிந்த துணை காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் தனது பணியை நேர்மையாகச் செய்த காரணத்திற்காக உடனடியாக தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது நாச்சியார்கோயில். 108 வைணவத் தளங்களில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற 14 வது தலமாக நாச்சியார்கோயில் அமைந்துள்ளது. இங்கே கல் கருடன் அமைந்துள்ளது இத்தலத்துக்கு மேலும் ஒரு பெயர் சேர்க்கும் சிறப்பம்சம்.
சுற்றுலாப்பயணிகள் கணிசமாக வந்துபோகும் இந்த ஊரில் குப்பைகளை சரிவர அகற்றுவது இல்லை என்பதும், திருக்கோவிலைச் சுற்றியுள்ள மணிமுத்தா நதி என்று அழைக்கப்படும் குளத்தினையும் சரிவர பராமரிப்பதில்லை என்பதும் இந்த ஊர் மக்களின் பெரும் கவலை.
ஆட்சி மாறுகிறது. காட்சி மாறவில்லை.
நாச்சியார்கோயில் காவல் நிலைய சரகத்திற்குள் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தனிப்பட்ட முறையில் சில பழிவாங்கும் கொலைகள் நடப்பது தொடர்கதையாகி உள்ளது . மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கமும் குறைவில்லாமல் நிறைந்துள்ளது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியில், சில மாதங்களுக்கு முன்னர் மணல் அள்ளிய கும்பலை தடுக்கச் சென்ற காவலர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர்கள் குடவாசல் பகுதியைச் சேர்ந்த அதிகாரமிக்க அதிமுக பிரமுகரின் விசுவாசிகள் என்று தெரியவந்துள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தனது சக காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நாச்சியார் கோவிலை அடுத்த கிராமமான வண்டுவாஞ்சேரி இரட்டை வாய்க்காலில் இருந்து 5 யூனிட் சவுட்டு மணலை சட்ட விரோதமாக அள்ளியுள்ளனர். காவல் துணை ஆய்வாளர் ஈஸ்வரன் அந்த வண்டியின் ஓட்டுனரையும், உதவியாளரையும் பிடித்து மணல் அள்ளியதற்கான அனுமதியை கேட்டுள்ளார். அந்த இருவரும் திருதிருவென்று முழிக்கவே இது சட்ட விரோத கும்பல் என்று உணர்ந்து அந்த லாரியை மடக்கி நாச்சியார்கோயில் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார்.
லாரியின் உரிமையாளர் யார் என்று விசாரிக்கும்போது அவர் பக்கத்து கிராமமான மாத்தூர் கிராமத்தின் அதிமுக துணை பஞ்சாயத்து தலைவரும், தஞ்சை மாவட்ட சிறுபான்மை பிரிவின் துணைச் செயலாளருமான சார்லஸ் என்று தெரியவந்துள்ளது. அதன்பின் மூவரையும் கைது செய்து நாச்சியார்கோயில் சிறையில் வைத்துள்ளார் ஈஸ்வரன்.
சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய, காவல் ஆய்வாளருக்கு புகார் தேவை. அதற்காக பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியாகவுள்ள சங்கர் என்பவரை தொடர்புகொண்டு எழுத்துப்பூர்வ புகார் அளிக்க உதவி ஆய்வாளர் கோரியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர் எந்த பதிலும் கூறாமல் மிக லாவகமாக இந்த விஷயத்திலிருந்து நழுவியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் நழுவியதைப் புரிந்துகொண்ட ஈஸ்வரன், இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருப்பதை அப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்.
பிறகு என்ன செய்வது என்று யோசித்த ஈஸ்வரன், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லி அவரை புகார் அளிக்கக் கேட்டுள்ளார். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் தாசில்தார், “நீதான வண்டிய புடிச்ச, நீயே கேஸ் போட்டுக்கோ” என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
அப்போதும் ஈஸ்வரன், ” நீங்க சொன்னத அப்படியே எழுதிக் கொடுங்க” என்று கேட்க, இதனால் கோபமடைந்த தாசில்தார் “உங்க இன்ஸ்பெக்டர் கிட்ட எல்லாம் பேசியாச்சு” என்று மிரட்டும் வகையில் பதில் கூறியுள்ளார்.
அப்போதும் விடாத ஈஸ்வரன், கும்பகோணம் கோட்டாச்சியர் பூர்ணிமாவைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கோட்டாச்சியர், “நான் பார்க்கிறேன்” என்று ஒற்றை வரியில் முடித்துள்ளார். கோட்டாட்சியரிடம் இருந்து எந்த அழைப்பும் ஈஸ்வரனுக்கு வராத நிலையில், யாரோ கொடுத்த அழுத்தத்தின் பேரில், பொறுப்பு வி.ஏ.ஓ சங்கர் வந்து, பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒரு வெற்று புகாரைக் கொடுத்துச் சென்றுள்ளார்.
வழக்கின் தன்மை நீர்த்துப்போகும் என்பதை உணர்ந்த ஈஸ்வரன், மீண்டும் கோட்டாச்சியர் பூர்ணிமாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், “நான் என்ன செய்யணும் இப்போ? ஏன் சும்மா சும்மா எனக்கே கால் பண்றிங்க? உங்க டி.எஸ்.பி கிட்ட பேசியாச்சு. நீங்க அவர் கிட்ட பேசிக்குங்க” என்று சற்று கடுமையான தொனியில் பதில் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், நாச்சியார்கோவில் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். இது நாச்சியார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களிடம் பேசுபொருளாகவும் மாறியது. மணல் அள்ளியவர்களுக்கு திராவிட மாடல் அரசு பாதுகாப்பாக இருப்பதாகவும், இதிலும் யார் யாருக்கு கமிஷன் போகுதோ என்றும் பேச்சு எழுந்தது.
பட்டப்பகலில் மண் அள்ளியவர்கள் மீது புகார் அளித்த தூத்துக்குடி விஏஓ., அவரது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டதும் இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான்! இதே ஆட்சியில் தான் சட்டவிரோத மணல் கொள்ளையருக்கு எதிராக செயல்பட்ட உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் மாற்றப்பட்டதும்!
இந்நிலையில், இந்தத் தொகுதியில் மணல் கொள்ளை நடத்திய சமூக விரோதிகள் ஒன்றுசேர்ந்து, கோட்டையில் முக்கிய ஆளுமையைச் சந்தித்து சால்வை அணிவித்து, சுயமரியாதையுடன் காலில் விழுந்து, தொழில் தடைபெறாமல் நடைபெற உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதியில் மணல் எடுக்க அரசு 3 மாவட்டங்களில் 12 இடங்களில் அனுமதித்துள்ள நிலையில், உள்ளூர் அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் கைகோத்து மணலை கொள்ளை அடித்து காசு பார்ப்பது தெரிந்தும் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு ஆதவராக இருப்பது மக்களிடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் “நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று சொன்னது, நேர்மையாளர்களுக்கும் ஒழுங்காக வேலை செய்பவர்களுக்கும் எதிராகத்தான் என்பதை உணர்ந்து சிரிக்கின்றனர் திராவிட மாடல் அதிகாரிகளும், கட்சியினரும்!
அப்பாவி மக்கள்தான், எப்போதும் போல் திமுக.,வை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்!
செய்திக் கட்டுரை: ஆதி