spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆடி 18: அரங்கன் காவிரி அன்னை சேர்த்தி சேவை!

ஆடி 18: அரங்கன் காவிரி அன்னை சேர்த்தி சேவை!

- Advertisement -

விஜயராகவன் கிருஷ்ணன்

ஆடி 18: இன்று தமிழர்கள் வாழும் உலகெங்கும் ஆடி 18 என்கிற சிறப்பான ஆற்றில் பொங்கி வரும் நீரை வரவேற்று வணங்கி போற்றும் திருநாள். இதை சங்க காலத்தில் தமிழர் மரபில் “புதுப்புனல் விழா” என்று அழைத்தனர் .

இதைப் பற்றி சங்க கால இலக்கியங்களில் சொல்ல பட்ட விஷயங்கள்…

முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
… – [அகநானூறு 222, பரணர்.]

முழவு முழக்கத்துடன் நீராட்டு விழா. காவிரி ஆற்றில் கழார் என்னும் ஊரின் துறையில் நீராட்டுவிழா. ஆட்டன் அத்தி நீச்சல் நடனம் ஆடினான். அழகெல்லாம் குடிகொண்டிருந்த மார்பினை உடையவன் ஆட்டனத்தி. தாழ்ந்த கூந்தலை உடைய காவிரி என்பவளும் அவனுடன் சேர்ந்து நீச்சல்-நடனம் ஆடினாள். காவிரி ஆட்டனத்தியை விரும்பினாள். தன் கூந்தலில் அவனை மறைத்துக்கொண்டு ஆற்றுநீரோடு கூட்டிச் சென்றாள்.

இது ஒரு பெரும் கதை – இதில் புது ஆற்றுப் பெருக்கு வரும் காலத்தில் வாலிப பிள்ளைகள் புது வெள்ளத்தில் குதித்து விளையாடி வீரத்தை காண்பிப்பார்கள் என்பது கரிகால் சோழன் காலத்தில் இருந்து இருக்கிறது – இன்று திருச்சி காவேரி ரயில் பாலத்தில் இருந்து நீரில் குதிப்பது எல்லாம் அதே கதை தான்!

வெள்ளம் ஆட்டனத்தி என்கிற அந்த வீரனை – இவன் கரிகால் சோழன் மகளின் காதலி – காவிரியை அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டன் அத்தி கரையில் ஒதுங்கிக் கிடந்தான். மருதி என்பவள் ஆட்டனத்தியைக் காப்பாற்றி அவனுடன் வாழ்ந்துவந்தாள். அரசன் கரிகாலனின் மகள் ஆதிமந்தி. ஆதிமந்தி ஆட்டனத்தியைக் காதலித்து வந்தாள். வெள்ளத்தில் சென்ற ஆட்டனத்தியைத் தேடிக்கொண்டு, காவிரியாற்றங் கரை வழியே வந்தாள் – நன்றாக இருக்கும் இந்த சரித்திரம் !

சிலப்பதிகாரம் :- 7. கானல்வரி

உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி.

உழவர் ஓதை – புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை – நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடை நீர் ஓதை – கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை – புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பல்வகை யோசையும், சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – மிக்கொலிக்கச் சென்றாய் ஆதலால், காவேரி நீ வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் – நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், வாய காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி – அரணினிடத்தைக் காவாமைக்கு ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ்வாயாக ;

தமிழ் இலகியங்களில் மிகப் பழமையான பரிபாடல்- காவேரி மட்டுமல்லாது – வைகை ஆற்றின் புதுப்புனல் விழா பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன!

ஆற்றில் நீர் பெருகி ஓடும்போது, மக்கள் தங்கள் வாழ்விலும் புது வசந்தம் பெருக இறைவனை வேண்டிக்கொண்டும் ஆற்றை தாயாய் வழிபட்டு .. இறை மூர்த்தங்களை ஆற்றுக்கு எழுந்தருளப்பண்ணி மரியாதை செய்கின்ற நன்னாள் இன்று!

காவிரி தாயாருடன் அரங்கன்
சேர்த்தி சேவை

காவேரி விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் ஸ வாசுதேவோ ரங்கேஷ: ப்ரத்யஷம் பரமம் பதம் – என்றும், கங்கையில் புனிதமாகிய காவிரி நடுவு பாட்டு பொங்குநீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் எங்கன் மால் இறைவன் ஈசன் இருந்ததோர் இருக்கை கண்டு எங்கனம் மறந்து வாழ்வேன் ஏழயேன் ஏழையேனே – என்றும் காவிரியின் சிறப்பு ஓங்கி உயர்ந்து சொல்லப் படுகிறது.

ஓங்கி உலகளந்தான் என த்ரிவிக்ரம அவதாரத்தில், 3 அடி அளக்கும் சமயத்தில் ப்ரம்ம லோகத்திற்க்கு பகவானின் ஒரு திருவடி செல்லும் நேரம், பகவானின் கட்டை விரல் நுனியில் ப்ரம்மா கமண்டலத்தில் பகவானின் நுனி விரலுக்கு திருமஞ்சனம் செய்த தீர்த்தம் பகீரதன் தபஸினால் இன்று கங்கையாக வருகிறது. ஆனால் காவிரியோ தான் செல்லும் வழியெங்கும் அரங்கன் திருவடிகளை வருடி அவன் கைங்கரியத்திற்கும் “ஸ்நான மூலா க்ரியா சர்வா:” என்று, திருவாராதனம், திருமஞ்சனம் ஆகிய பகவத பாகவத கைங்கர்யம் செய்ய வசதியாக இருப்பதால் கங்கையை விட புனிதம் என நினைத்தார் போலும்!

திருவரங்கம் தொட்டு பூம்புகார் செல்லும் வரை அரங்கன் தொடங்கி, அப்பக்குடத்தான், சாரங்கபாணி, பரிமளரங்கன் என அனைத்து அரங்கன் திருவடிகளையும் வருடிச் செல்வதால் கங்கையை விட புணிதம் என தொண்டரடிப்பொடி ஆழ்வார் நினைத்தார் என்பர்.

அந்தச் சிறப்பு வாய்ந்த அரங்கன், காவிரித் தாயாயருடன் சேர்த்தி கண்டு அனுபவிக்கும் நன்நாள் இன்று!

அரங்னுக்கு காவிரி தாயாருடன் – ஆடி 18
கமலவல்லி தாயாருடன் – பங்குனி ஆயில்யம்
பெரிய பிராட்டியுடன் – பங்குனி உத்திரம்
சேரகுல வல்லியுடன் – சித்திரை நவமி
என நான்கு சேர்த்தி சேவைகள் ஒரு வருடத்தில் நடை பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe