Dhinasari Home page

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்

News

ramadoss சென்னை: பனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதி அளவு ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பனை மரங்களின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. பனை மரத்தின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு பயன் தரக்கூடியவை ஆகும். ஆனால், தமிழகத்தின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் இப்போது வேகமாக அழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரிபொருளாக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் காய்த்துக்கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதும் பனைமரங்களுக்கு ஆபத்தாகியிருக்கிறது. பனைகளைப் பாதுகாப்பது கடினமான பணி இல்லை. பனையிலிருந்து போதிய அளவில் இப்போது வருவாய் கிடைக்காததால் தான் அதை பாதுகாப்பதில் பலரும் அக்கறை காட்டவில்லை.எனவே, பனையைக் காப்பதுடன், அதை நம்பியிருப்பவர்களுக்கு அதிக வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி தர வேண்டும். சந்தன மரம், தேக்கு மரம் இணையாக பனை மரத்தை அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால்தான், அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்காக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.