
தமிழக அரசின் நிபந்தனைகளால் வேதாந்தா-பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்குவதை தவிர்த்து மகாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் துவக்கியுள்ளது என்று அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை இந்த அரசு விரட்டி அடித்துள்ளது.
வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வேதாந்தா – பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் மகாராஷ்டிர மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் துவக்கியுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும், மொத்த ஜிஎஸ்டி வருவாயாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கைநழுவி போனதன் விளைவாக, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த அரசு.
தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு உட்பட இதர கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், இந்த முதலீட்டில் ஆட்சியாளர்கள் தங்கள் குடும்ப ஆதாயத்தை எதிர்பார்த்ததால், தொழில் முதலீடுகள் இடம் மாறிவிட்டதாக விபரம் அறிந்த தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திமுக-வின் 18 ஆண்டுகால ஆட்சியில், அரசின் சார்பாக எந்தெந்த தொழிற்சாலைகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? தவறிப்போய் ஒன்றிரண்டு தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்தாலும், ஓடிவிடுகின்றார்கள். மக்கள் நலனில் அக்கறை காட்டாத இந்த அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.