
ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்தர பொன்விழாவையொட்டி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக மாவட்ட தலைவர்களிடம் தேசிய கொடிகளை மாநில தலைவர் அண்ணாமலை இன்று வழங்கினார்.
ஒரு கொடியின் விலை ரூ.25 அனைத்து மாவட்டங்களிலும் கட்சியினர் வாங்கி வீடு வீடாக விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: எல்லா கட்சிகளும் கட்சி பேதமின்றி வீடுகளில் தேசிய கொடியேற்ற கொடிகள் வழங்க வேண்டும். பா.ஜனதா சார்பில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியேற்ற திட்டமிட்டுள்ளோம். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். தி.மு.க.வின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞரை வீடு புகுந்து வெளியே தூக்கி வந்ததை முதல் முதலில் கண்டித்தது அப்போதைய பிரதமர் வாஜ்பாய். இப்போது விசாரணைக்காகத்தான் சம்மன் வழங்கி சோனியாவை அழைத்துள்ளார்கள்.
அதற்காக ரோடுகளை மறிப்பதுதான் ஜனநாயகமா? எல்லாவற்றையும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. தமிழக அரசின் மீதான நம்பகத்தன்மையும், ஆவின் பால் அளவும் குறைந்து விட்டது. பாலின் அளவை குறைத்து ஆவின் நிறுவனத்தில் மிகப்பெரிய மோசடி செய்துள்ளார்கள். அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 70 மில்லி பாலை குறைத்து 430 மில்லி பால் மட்டும் வழங்கி இருக்கிறார்கள். தினமும் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அளவை குறைத்ததன் மூலம் ஒரு கவர் பாலுக்கு 3 ரூபாய் 8 காசுகள் குறைய வேண்டும். கிட்டத்தட்ட தினமும் 2 கோடியே 16 லட்சம் ரூபாயை சுருட்டி இருக்கிறார்கள். அளவு குறைவாக இருப்பதை பொதுமக்கள் பரிசோதித்து கொள்ளலாம் என்று இந்த விவகாரம் வெளியே வந்த பிறகு ஆவின் நிறுவனம் கூறி உள்ளது. ஒவ்வொரு பால் பாக்கெட்டையும் பொதுமக்கள் சரி பார்ப்பது சாத்தியமில்லை. அந்த நம்பிக்கையில்தான் இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள். சட்டத்துக்கு புறம்பாக சுருட்டப்பட்ட இந்த பணம் யாருக்கு போய் சேர்ந்தது? வழக்கம் போல் அதிகாரிகள் மீது மட்டும் பழியை போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் இப்படி விதவிதமான புதிய பாணியில் முறைகேடுகள் நடந்து கொண்டே வருகின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறது தி.மு.க. தமிழகத்தில் எப்படியெல்லாம் ஜி.எஸ்.டி. விவகாரத்தில் ஆளும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்பதை பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் நிர்மலா சீதாராமன் பேசினார்.
ஆனால் அதை கேட்காமல் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் வெளியேறினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணை பட்டியலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் அமலாக்கத்துறையினர் விரைவில் விசாரிப்பார்கள். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக 2-வது உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்த பிறகு பா.ஜனதாவின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம், தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா என்று கேட்டதற்கு அதற்கு சாத்தியமே இல்லை என்றார்.