
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பழிவாங்கும் எண்ணத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் தலைவர். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோருமே தலைவர்கள்தான் நாங்கள் எத்தனை முறை விழுந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எழுந்து வருவோம்.என இபிஎஸ் தாராபுரத்தில் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு புறப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் வழியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தாராபுரத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பழிவாங்கும் எண்ணத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் தலைவர். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோருமே தலைவர்கள்தான். இங்கு அடிக்கும் காற்றை யாராலும் தடுக்க முடியாது. அதுபோல் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
எம்.ஜி.ஆரை கருணாநிதி அழிக்க பார்த்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க. சின்னாபின்னமாகி விடும் என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் ஜெயலலிதா அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தினார். இப்போது நாங்கள் வழிநடத்துகிறோம். இலங்கையில் ஒரு குடும்பத்தின் ஆட்சியால் அந்நாடு பாதிப்பை சந்தித்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டை விட்டே தப்பி சென்றுள்ளனர். அது போன்ற நிலை இங்கும் சீக்கிரம் வரும். காத்திருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தினோம். 16 லட்சம் விவசாயிகள் வாங்கிய ரூ.12ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, கியாஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்றனர். ஆனால் இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை. மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர். வீட்டுவரியை ரூ.1000த்தில் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தியுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, வீட்டு வரியை உயர்த்த வேண்டும் என்றார். ஆனால் நான் உயர்த்தக்கூடாது என்று கூறிவிட்டேன். ஆனால் இப்போது அவர்கள் உயர்த்தி விட்டனர். முதியோர் உதவித்தொகை வழங்குவதை நிறுத்த முயற்சி செய்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது மின்சாரம் எப்போது வரும், போகும் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மின்தடை ஏற்படுகிறது. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்றார்கள். ஆனால் இலவச பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை. இயக்கப்படும் பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளது. செல்லும் போது வழியில் நின்று விடுகிறது. நாங்கள் எத்தனை முறை விழுந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எழுந்து வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.