தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திராவிடட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த திமுக ஆட்சி என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.
சென்னை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா என்ற மாணவி, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். திமுக அரசின் கையாலகாததனத்தால் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நீண்டு கொண்டே இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதிமுக அரசால் உருவாக்கப்பட்ட நீட் பயிற்சிமையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
இனியும் இந்த திமுக ஆட்சி நீட் தேர்வை ஒழிக்கும் என்று மக்கள் நம்ப தயாராக இல்லை. நீட் தேர்வு ரத்து வரை மாணவ செல்வங்களின் எதிர்கால நலன் கருதி நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் துவங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்களை துவங்கிவைத்து நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப்பயிற்சியை அளிக்க வேண்டும், எனக்கூறியுள்ளார்.